Translate

Monday, September 19, 2016

சிற்றிதழ் விமர்சனம் - 2.
" குறி " காலாண்டிதழ்.
துபாயில் உட்கார்ந்து கொண்டு ஒரு சிற்றிதழை எப்படி விமர்சனம் செய்ய முடியும் என்ற இயல்பான கேள்வி உங்கள் மனதில் எழுவதை நான் உணர்கின்றேன்.
ஒரு சிற்றிதழை படிக்காமல் விமர்சனம் செய்ய முடியாது. ஆனால் நான் துபாயிலிருந்தாலும் நண்பர்கள் உதவியுடன் பி.டி.எஃப். மூலமாகவோ, அச்சு பிரதி மூலமாகவோ விமர்சிக்க முடிவு செய்தவுடன், இலங்கையிலிருந்து திரு.சுந்தர் நிதர்சன் " காற்புள்ளி " என்ற சிற்றிதழின் பி.டி.எஃப். அனுப்பி இதழைப் பற்றி விமர்சிக்க வேண்டினார். அப்போதுதான் சிற்றிதழ் விமர்சனம் என்ற புதிய பகுதியை துவங்கும் எண்ணம் வந்து காற்புள்ளி இதழ் குறித்து எழுதினேன். அதற்கு நண்பர்களிடத்தில் நல்ல வரவேற்பு இருந்தது. மகிழ்ச்சியளித்தது. அதன் தொடர்ச்சியாக இன்று குறி காலாண்டிதழ் குறித்து பார்ப்போம்.
இந்த இதழின் அச்சுப் பிரதியை என் இனிய நண்பர், சிற்றிதழாளர் திரு.அன்பாதவன் அவர்கள் எனக்காக பிரத்தியேகமாக இந்தியாவிலிருந்து எடுத்து வந்து கொடுத்தார். முதலில் அவருக்கு என் நன்றியை உரித்தாக்குகின்றேன்.
தமிழக தென் திசையிலிருந்து சிற்றிதழ் துறையில் குறி பார்த்து கோலோச்ச வந்திருக்கும் சிற்றிதழ் தான் குறி காலாண்டிதழ். கூரை வேய்ந்த வீட்டிலிருந்து இலக்கியத்தின் மேன்மையை கூர் தீட்ட வந்துள்ள இதழ் தான் இது. இதன் ஆசிரியர் குழு திரு.மணிகண்டன் அவர்களின் தலைமையில் ஆர்வமிக்க எழுத்தாளர்களைக் கொண்டு செயல் திட்டத்தை முன்னெடுக்கிறது. பதிவுக்கு உகந்த எழுத்துகளை தெரிவு செய்வதில் சமரசமில்லாமல் செயல்படுவது, இதழில் வெளியாகி உள்ள பதிவுகளிலிருந்து உணர முடிகிறது.
ஆரம்பமே அதிரடிதான்.
1. இளங் கவிஞன் இரா.பூபாலனின் கவிதை "அழுது கொண்டிருந்தேன்.."
சாலைப்பிளவின் தேங்கிய நீரில்
விழுந்து கிடந்த உருவம்
நம் பண்பாட்டின் சித்திரத்தை
புட்டி வடிவில் வரைந்து கொண்டிருந்தது.
எத்தனை துல்லியமாக தன் கருத்தை கோபத்துடன் வெளிப்படுத்தி உள்ளார் பாருங்கள். அவரின் சமூக அக்கறையின் வெளிப்பாடு தான் இது.
2. முனைவர் பா.குமார் அவர்களின் "கண்ணாமூச்சி ரே ரே" நாட்டுப்புற விளையாட்டுகளைப் பற்றிய கட்டுரை நம்மை நம் இளமைக் காலத்திற்கு அழைத்துச் செல்கிறது. நாம் இழ்ந்துள்ள நம்மை ஆழ்ந்த வருத்தத்திற்கு இட்டுச் செல்கிறது.
இந்த விளையாட்டுகள் எந்த அளவு நம் வாழ்க்கையின் மேம்பாடுக்கான அத்துணைக் காரணிகளையும் உள்ளடக்கி உள்ளது என்பதை பல எடுத்துக் காட்டுகளுடன் நிறுவி உள்ளார்.
இந்த விளையாட்டுகள் எந்த அளவிற்கு சமூக ஒற்றுமை, நல்லிணக்கம், சிந்திக்கும் திறன், மருத்துவ குணம், படிப்பினைகளை கற்றுக் கொடுக்கிறது என்பதையும் வலியுறுத்தி உள்ளார்.
கிச்சுக் கிச்சாண்டி
கீரத் தண்டாண்டி
நட்டு வச்சாண்டி
பட்டுப் போச்சாண்டி
ஓ.. எத்தனை அருமை. அவசியம் நீங்கள் படிக்க வேண்டிய கட்டுரை.
3. தி.காவிரிநாடனின் - பறவைக் காட்டிலும் இரக்கமுடையவர்கள் கவிதை.
சதைத் துண்டங்களை தானியமெனக் கொறித்து
நதியில் குழந்தைகளில் உதிரும் பருகி
முள்வேலியில் சிக்கியது.
பறவையை காட்டிலும் இரக்கமுள்ளவர்கள்
வியாபாரம் நடத்துகிறார்கள்
பறவையை வைத்து.
ஈழப் போராட்டத்தக் கொச்சைப் படுத்திய ஜெய மோகன் களுக்கும், சாம் ராஜ்களுக்கும் இந்த கவிதை ஒன்றே பதிலளிக்கும். இனிமேலாவது திருந்துவார்களா?
4. பூர்ணா அவர்களின் - மானுட மேம்பாட்டில் இன்றைய கவிதைகள் மிக அருமை.
சாதியும் மதமும், சமூகம், பெண்ணியம், உழைப்பின் பாத்திரம் என்ற தலைப்பின் கீழ் இன்றைய கவிதகளை அலசி ஆராய்ந்துள்ளார்.
கு.சின்னப்பன் கவிதையில்
நாளெல்லாம் உழைக்கின்றோம்
தேகத்தில் வியர்வை, விழிகளில் செந்நீர்
வயிற்றிலே பசி வாழ்வில் வெறுமை
வேறென்ன கிடைக்கிறது
பாட்டாளிக்கு?
இதைவிட உழைப்பின் வலியை வெளிப்படித்த முடியாது.
நீதி தாசன் கவிதையில்..
புல்லாங்குழலில் வாசித்தேன்
இரத்தம் கசிந்தது
ஈழத்து மூங்கில்.
ஸ்ரீதர் பாரதி கவிதையில்...
வித்திட்டோம்
பயனில்லை
வித்துட்டோம்.
விவசாயியின் வேதனையை இதைவிட சுருக்கமாக, நெத்தியடியாக வெளிப்படுத்த முடியாது.
மேலும் தரணி வேந்தன், ஆனந்தி ராமகிருஷ்ணன், பச்சோந்தி கவிதைகள், தணியன், மொழி பெயர்ப்பு சிறுகதைகள் சிறப்பு. புத்தக விமர்சனம், ஜெ.செல்வராஜின் கட்டுரையும் சிறப்பாக உள்ளது.
அத்தனைப் பக்கங்களிலும் ஆசிரியர் குழுவின் உழைப்பை காண முடிகிறது. வாழ்த்துக்கள்.
என் ஆலோசனைகள் சில.
1. எழுத்தாளர்கள் அறிமுகம்.
2. சம காலத்தில் உள்ள சிறந்த சிற்றிதழ்களை வாசகர்களுக்கு அறிமுகப்படுத்துவது.
3. கடந்த காலத்தில் வெளி வந்த சிற்றிதழ்களின் தாக்கத்தை வாசர்களுக்கு அறிமுகப்படுத்தலாம்.
4. வாசகர்களுக்கான இலக்கிய போட்டிகளை நடத்தலாம்.
5. கவிதைகளின் வேறு வடிவங்களையும் பதிவு செய்யலாம்.
6. இதழின் விலையைக் கட்டுக்குள் வைத்து, சந்தா சேர்ப்பதில் கவனம் செலுத்துவதன் மூலம், தொடர் வெளியீட்டை உறுதி படுத்துத்திக் கொள்ளல் வேண்டும்.
நன்றி நண்பர்களே. இத்தனை நீண்ட விமர்சனத்திற்கு உங்கள் குறைகளை, நிறைகளை சுட்டிக் காட்டுங்கள். இன்னும் மனதில் நிறைய இருக்கிறது. நீளம் காரணமாக இத்துடன் முடிக்கின்றேன்.
இந்த இதழின் விலை ரூ.20/= தான். 
10 இதழ்களின் விலை ரூ.200/=
சந்தா செலுத்தி ஆதரவு அளியுங்கள்.
ADDRESS :
KURI MAGAZINE,
KATCHERY SCHOOL OPP.,
MARCKET ROAD,
VEDASANDUR - 624710.
EMAIL : kurimagazine@gmail.com
CELL No: 9976122445
கிருஷ்.ராமதாஸ், சிற்றிதழ் நலம் விரும்பி, 19.09.2016.

No comments:

Post a Comment