Translate

Tuesday, September 27, 2016

சிற்றிதழ் விமர்சனம்

சிற்றிதழ் விமர்சனம் - 3.

நிகரன் சிற்றிதழ்



விருதுநகர் மாவட்டம், ஆலங்குளத்திலிருந்து  திரு.பாஸ்கரன் அவர்களை ஆசிரியராக கொண்டு வெளி வரும் இரு மாத சிற்றிதழ் தான் நிகரன்.
ஜோக்கர் திரைப்படத்தின் இயக்குனர் திரு.ராஜு முருகன் முகப்புப் படத்தை கொண்டு வெளியாகி உள்ளது.

1. மகா கவி பாரதியின் நினைவு நாளை போற்றும் வகையில் மூன்று கவிதைகள் பிரசுரிக்கப் பட்டுள்ளது சிறப்பாகும்.

2. நெசவுக் குடும்பத்தில் பிறந்து, கரிசல் மண்ணின் கலை, இலக்கியம் , வாழ்வியல் அனைத்தையும் தன்னகத்தே கொண்டு, இசைக் கலைஞனாக வாழ்ந்து மறைந்த திரு.திருவுடையான் குறித்த நினைவுக் கட்டுரை சிறப்பு. திருவுடையானுடன் திரை இசை மேதைகள் கொண்ட ஈர்ப்பு குறித்த பதிவுகள் அருமை. உடல் மறைந்தாலும் இசை உயிரோடு கலந்து பட்டி  தொட்டிகளெல்லாம் வாழ்ந்து வருகிறது என்று முத்தாய்ப்பாக முடித்துள்ளது அருமை.

3. திரு.லட்சுமண பெருமாள் அவர்களின் கரிசல் நாட்டு கருவூலங்கள் என்ற சிறு கதைத் தொகுப்பிலிருந்து  " அதே மூத்தாளி  " என்ற சிறு கதை வெளியாகியுள்ளது.  இந்த சிறு கதை கரிசல் மண்ணின் கலாசாரத்தையும் , வாழ்க்கை முறையும், பேச்சு வழக்கையும் முழுமையாக வெளிப்படுத்து சிறப்பானது .

4. கணிதமும் விநோதமான புனைவு என்ற தலைப்பில் வேலாயுதம் பொன்னுசாமி அவர்கள் உலக புகழ் பெற்ற எழுத்தாளர்களின் படைப்புகளை பற்றி எழுதியுள்ள ஆய்வுக் கட்டுரை இந்த இதழுக்கு மகுடமகா திகழ்கிறது. நகுலனை வாசிக்க நனவோடை உத்தியும், போர்ஹேயின் சிறுகதைகளை வாசிக்க கண  கணிதம், வடிவ கணிதம், விநோதங்கள் பற்றி புரிதலின் அவசியத்தை வெளிப் படுத்துகின்றார். திரு.பிரமீள் அவர்கள் [ E = mc2 ] என்ற சூத்திரத்தை தலைப்பாக கொண்டு எழுதிய கவிதை முயற்சியை முன்னிலைப்படுத்தி உள்ளார். தொடக்கத்திற்கும்  இறுதிக்கும்  இடைப்பட்டவைகளை  தீர்மானிப்பதை இட்டு கட்டுதல் என்று போர்ஹே கூறுவதையும், ஒட்டி புழுகுதல் என்ற புதுமைப்பித்தனின் கருத்தையும் ஒப்பிட்டிருப்பது அருமை. 


5. யுகபாரதி எழுதியுள்ள ஜோக்கர் திரைப்  படப் பாடல் வெளியிடப்பட்டுள்ளது. அரசியல்வாதிகளை அலங்க மலங்கடிக்கிற கவிதை.
நூறு கோடி மனிதரு 
யாரு யாரோ தலைவரு 
ஓட்டு வாங்கிப் போற நீங்க 
ஊழலோட டீலரு 

நல்ல தண்ணி கெடைக்கல
நல்ல காத்து கெடைக்கல 
அரசாங்க சரக்குலத்தான் 
கொல்லுறீங்க சனங்கள.

ஒவ்வொரு வரிகளும் ஊழல் அரசியல்வாதிகளுக்கு சம்மட்டி அடி  தான். 

6. கொ.மா.கோதண்டம் அவர்களின்  திரைத் துரை  அனுபவங்கள் அவசியம் படிக்க வேண்டிய கட்டுரை.   

7. பாதியில் முடிந்து போன பாட்டு  என்ற தலைப்பில் பிறவிக் கலைஞன்  நா.முத்துக்குமார் பற்றிய கட்டுரையை படித்ததும் மனம் கனக்கிறது. கடன்  வாங்கியாவது மற்றவர்க்கு உதவி செய் என்ற அவரது வார்த்தை கண்ணீரை வரவழைக்கின்றது. 

8. ஜோக்கர் திரைப் பட இயக்குநர் திரு.ராஜு முருகன் அவர்களின் நேர்காணல்  தொகுப்பு மிக அருமை. கேள்விகளை தவிர்த்து பதிலிலிருந்தே கேள்விகளை யூகிக்கக் கூடிய அளவில் வெளியிட்டிருப்பது நல்ல உத்தியாகும். இடதுசாரி சித்தாந்தத்தை மனதில் இருத்தி களப்பணி செய்து, அங்கு கிடைக்கும் அனுபங்களைக் கொண்டு செயல் திட்டம் வகுக்க வேண்டும் என்ற கருத்து மிக சிறப்பானது. இளைஞர்களின் அரசியல் புரிதலையும், மார்கசியத்தின் மீதான ஈர்ப்பையும் ஒப்பிட்டுருக்கின்றார்.
ஒரு மனிதனுடைய மன அற எழுச்சி தான் அரசியல். அதை யார் உருவாக்குகின்றார்களோ அவர்கள் தான் அரசியல்வாதிகள்  என்ற அவரின் கருத்து அருமை. கருத்து சுதந்திரத்திற்கான , எல்லோரும் அரசியல் பேசலாங்கிறதை மையாக கருத்தாக ஜோக்கர் படம் வெளிப்படுத்தி உள்ளதை அவர் சுட்டிக் காட்டினார்.

9. பூவரசி மறைமலையான் அவர்களின் கவிதை அருமை. சாதி ஆணவக்  கொலைக்கெதிராக கோபக் கனலை வீசுகிறது கவிதை.

10. என் முகநூல் நண்பர் திரு.கலியமூர்த்தி அவர்களின் 2 கவிதைகள் இடம் பெற்றிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. 

சாதீயத்தின் அவமானங்களை 
சாராயத்தில் கரைத்த ஒரு தகப்பன் 

கலாம்கள் காட்டும் கனவுக்கு பதிலாக 
காரல் மார்க்ஸ் ஊட்டிய கணவேயிருக்கிறது 

என்று முடித்து தான் ஒரு இடதுசாரி சிந்தனையாளன் என்பதை அடையாளப்படுத்தியிருக்கும் விதம் அருமை.  

11. இரா.கதைப்பித்தனின் ஜோதிட பலன் அவசியம் படிக்க வேண்டிய ஒன்று.

12. இறுதியாக பாவலர்.கருமைலைத் தமிழாழன் அவர்களின் சிரிக்கிறது சுதந்திரம் என்ற கவிதையில் சுதந்திரம் படும் பாட்டை தன் கவிதை மூலம் கப்பலேற்றியிருக்கின்றார். கவிதை சமூகத்தின் மீது இருக்கும் அக்கறையை வெளிப்படுத்துகின்றது.

இந்த இதழில் பங்கெடுத்துள்ள எழுத்தாளர்கள் அனைவருக்கும் என் பாராட்டுதலை உரித்தாக்குகின்றேன்.
இது விலையில்லா இதழ். வாசகர்களின் நன்கொடைகள் ஏற்றுக்  கொள்ளப்படுகின்றன.

இதழின் ஆசிரியர் திரு.பாஸ்கரன் அவர்களின் உழைப்பு ஒவ்வொரு பக்கத்திலும் மிளிருகிறது . வாழ்த்துக்கள் அய்யா.

இதழ் முகவரி 

பா.பாஸ்கரன்,எம்.ஏ.,
3/806, எம்.ஜி.ஆர்.நகர்,
டி.என்.சி. கிராஸ் ரோடு,
ஆலங்குளம் - 626127,
வழி - ராஜபாளையம்,
விருதுநகர் மாவட்டம்.
கை  பேசி எண் : 7871307773

Email : nikarantamil@yahoo.com





No comments:

Post a Comment