Translate

Thursday, October 20, 2016

டிரங்குப் பெட்டியிலிருந்து இலக்கிய வெளிக்கு வரும் சிற்றிதழ்கள்

டிரங்குப் பெட்டியிலிருந்து இலக்கிய வெளிக்கு வரும் சிற்றிதழ்கள் 

சிற்றிதழ் எண்  : 2.

ஏர் சிற்றிதழ்.
ஆசிரியர் : ஏர் மகாராசன் 
பெரியகுளம்,
தேனீ மாவட்டம். 



கிராமப்புற பின்னணியிலிருந்து வெளி வந்த, பன்முகத் திறமையாளர் திரு.மகாராசன் அவர்களால் வெளியிடப்பட்ட ஒரு சிறப்பு வாய்ந்த சிற்றிதழ் தான் ஏர். 
எத்தனையோ சிற்றிதழ்கள் வெளிவந்தாலும், சில இதழ்கள் இலக்கிய உலகில் ஏற்படுத்தும் தாக்கமும், சலனமும், விவாதங்களும் சிறப்பானவை. அதனால் அந்த இதழ்கள் எந்த காலகட்டத்திலும் கவனத்தை கவர்பவையாகத் 
திகழ்ந்துள்ளன.  
ஏர் - சமூக மாற்றத்திற்கான உழவு என்ற முழக்கத்துடன், இலக்கியம், கலை,
அரசியல், பண்பாடு, மொழி, பெண்,

கல்வி,  சமூக மேம்பாடு என்று அனைத்து துறைகளிலும் ஆழ உழுது களை நீக்கிய கருத்தியலையும், விவாதங்களையும் முன்னெடுத்து மக்களின்  முன்னேற்றப் பாதைக்கான வழிகாட்டியாக திகழ்ந்திருக்கிறது என்றால் மிகையாகாது.

இந்த இதழ் மதுரையிலிருந்து 2000 மாவது ஆண்டில் தொடங்கி 8 இதழ்களை  வெளியிட்டு நின்று போனது வருத்தமான செய்தியாக இருந்தாலும், அதன் செயல்பாடு இலக்கிய உலகில் பாராட்டுக்குரியதாகவே இருந்துள்ளது.

மாற்று உரையாடலை கட்டமைக்க உதவுகிற படைப்புகளுக்கும், கட்டுரைகளுக்கும் முன்னுரிமையளித்துள்ளது. பார்ப்பனிய காவியத்திற்கு எதிராகவும், தமிழ் தேசியத்திற்கு ஆதரவாகவும், சாதிய  ஒடுக்குமுறைக்கு எதிராகவும், பெண் விடுதலைக்கு  ஆதரவாகவும் குரல் கொடுப்பதை நோக்கமாகக் கொண்டு, இதழின் உள்ளடக்கங்களில்  முன்னுரிமையளித்ததாக இதழின் ஆசிரியர் திரு.மகாராசன் அவர்கள் தெரிவித்த போது, அவருடைய திடமான சிந்தனையையும், சமூக மேம்பாட்டில் அவர் கொண்டிருந்த ஈடுபாட்டையும் வெளிப்படுத்துவதாக இருந்தது. ஏர் சிற்றிதழ் அந்த காலகட்டத்தில் தமிழ் மொழி, இன, நில அடையாள மீட்பு போர் வாளாக செயல்பட்டதாகவும் குறிப்பிட்டார்.

திரு.மகாராசன் அவர்கள் வேளாண் தொழிலிலும் ஈடுபட்டுக் கொண்டே, இலக்கிய உலகிலும், இணையில்லா இளம் எழுத்தாளராக வலம் வருகின்றார். 7க்கும்  மேற்பட்ட புத்தகங்களை வெளியிட்டுள்ள மகாராசன் அவர்கள் சமீபத்தில் " மொழியில் நிமிரும் வரலாறு " என்ற புத்தகத்தை வெளியிட்டுள்ளார். இந்த இதழுக்கு ஏர் என்று பெயரிட்டது திரைப்பட பாடலாசிரியர் திரு.அறிவு மதி என்பது சிறப்பாகும்.



இந்த இனிமையான தருணத்தில் திரு.ஏர் மகாராசன் அவர்கள் இலக்கிய  உலகிலும்,தனி வாழ்க்கையிலும் மேலும் பல சிறப்புகள்  பெற்று பெருமையுடன் வாழ தன்  இதய பூர்வமான வாழ்த்துக்களை சிற்றிதழ்கள் உலகம் தளம் தெரிவித்துக் கொள்கிறது. வாழ்த்துக்கள்  மகாராசன்.

குறிப்பு : உங்களிடம் உள்ள இதழ்களை பி.டி.எப். வடிவில் மாற்றி உலகம் முழுதும் பரவியுள்ள சிற்றிதழ்  வாசகர்களுக்கும், தமிழ் ஆர்வலர்களுக்கும் அளித்திட வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன். நன்றி. வணக்கம்.

கிருஷ்.ராமதாஸ், சிற்றிதழ் நலம் விரும்பி.
20.10.2016.

No comments:

Post a Comment