Translate

Saturday, October 8, 2016

சிற்றிதழாளருடன் சந்திப்பு


ஒரு சிற்றிதழாளருடன்  -  
ஒரு சிற்றிதழ் நலம் விரும்பியின் சந்திப்பு 




அணி சிற்றிதழ் வெளியீட்டாளர் திரு.அன்பாதவன் அவர்களுடன் - 
சிற்றிதழ் நலம் விரும்பி கிருஷ்.ராமதாஸ் சந்திப்பின் அனுபவங்கள்.

வணக்கம் நண்பர்களே.
கடந்த பக்ரீத் விடுமுறை நாளில் எழுத்தாளரும், கவிஞரும், சிற்றிதழாளருமான திரு.அன்பாதவன் அவர்களின் அழைப்பின் பேரில் துபாய் சென்று அவரை சந்திக்கும்  வாய்ப்பு கிட்டியது. இனிமையான சந்திப்பு.
இருவரும் சுமார் 3 மணி நேரம் கலந்துரையாடினோம். உள்ளுர் இலக்கியத்திலிருந்து, உலக இலக்கியம் வரை எங்கள் உரையாடல் நீண்டிருந்தது. 

18 வயதில் வேலைக்கு சென்ற அவரின் வாழ்க்கை எப்படியெல்லாம் இலக்கியத்துடன்  பின்னி பிணைந்து வந்துள்ளது என்பதை பல நிகழ்சசிகளுடன் விளக்கினார். 

வங்கிப் பணிக்காக மும்பையிலிருந்த போது நண்பர் திரு.மதியழகன் சுப்பையா உடன் இணைந்து " அணி " என்ற சிற்றிதழ் நடத்திய அனுபத்தை பகிந்து கொண்டார். அந்த இதழில் கவிதைக்கு முக்கியத்துவம் கொடுத்து உலக கவிதைகளை நோக்கி நகர்த்தும் முயற்சியை முன்னெடுத்த அனுபவத்தை பகிர்ந்து  கொண்டார். அதனடிப்படையில் அய்க்கூ, லிமரைக்கூ, சென்ரியூ, மொழி பெயர்ப்பு, உரைநடை கவிதை, கவிதை குறித்தான கட்டுரைகள், விமர்சனங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதை நினைவு கூர்ந்தார். மேலும் இதழ் விற்பனையில், இலவசம் என்ற நிலைக்கு எதிராக இருந்ததையும் குறிப்பிட்டார்.

இன்றைய சிற்றிதழ் உலகின் நிலைமை குறித்த விவாதத்தில், தொடர் வெளியீட்டிற்க்கான உத்திரவாதத்தை உறுதிப்படுத்த என்ன செய்யலாம் என்பது குறித்தும் ஆலோசித்தோம். 

1. சிற்றிதழாளர்கள் குறிப்பிட்ட  அளவு சந்தாவை உறுதிப்படுத்திக்  கொள்ள    வேண்டும். 

2. சந்தா சேர்ப்பதில் முழு கவனமெடுக்க  வேண்டும். 

3. அவசர உதவிக்கான வைப்புத் தொகை  உருவாக்குவது. 

4. சமரசமில்லாத எழுத்துக்களை    பதிவுகளில் முன்னெடுப்பது. 

5. இதழ் விநியோகத்தில் மண்டலவாரியாக  இதழ்களை பரிமாறிக் கொள்ளும்    திட்டத்தை உருவாக்குவது. 

6. சிற்றிதழாளர்களையும், சிற்றிதழ்    எழுத்தாளர்களையும் பாராட்டி  கவுரவிக்கும்  நிகழ்சசிகளை  முன்னெடுப்பது.

7. குழுச்சண்டைகளை தவிர்த்தல்.   

இது போன்ற பல முன்னெடுப்புகளில் ஈடுபட வேண்டியதின் அவசியம் குறித்து ஆலோசித்தோம்.

மேலும் அன்பாதவன் அவர்கள் கவிதை, சிறுகதை புத்தகங்களை வெளியிட்ட அனுபவத்தையும், தன் சிறு கதை பரிக்ஷா மூலம் குறும் படமாக்கப்பட்டதையும், அதில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டார். 





நானும் என் சிற்றிதழ் ஈடுபாட்டிற்க்கான காரணத்தையும், 1980 களில்  பொள்ளாச்சி நசன் அய்யாவுடன்  தபால் அட்டை மூலமான தொடர்பை நினைவுபடுத்தினேன். முகநூல் மூலம் சிற்றிதழ் துறையில் என் செயல்பாடுகள் குறித்தும் கலந்துரையாடினோம். 

1. சிற்றிதழ் ஊக்குவிப்புத் திட்டம்

இத்திட்டத்தின் மூலம் 3 ஆண்டு சந்தா தொகை செலுத்தப்படுகிறது. இது வரை 35 இதழ்களுக்கு சுமார் ரூ.10,000/= அனுப்பப் பட்டுள்ளது. 

2. சிற்றிதழ் போட்டிகள்

முகநூலில் சிற்றிதழ் போட்டிகள் நடத்தி வாசகர்களின் ஆர்வத்தை தூண்டும் வகையிலும், சிற்றிதழ்களின் மீதான ஈடுபாட்டை கூட்டச் செய்வதற்காகவும் நடத்தப்பட்டு அவர்களுக்கு சிற்றிதழ்களின் பி.டி.எஃப். பிரதிகள் இமெயில் மூலம் அனுப்பப்படுகின்றன. வாசர்களின் பங்களிப்பு மகிழ்ச்சியளிக்கக் கூடிய வகையில் உள்ளது. இது வரை 19 போட்டிகள் நடத்தப்பட்டுள்ளன்.

3. சிற்றிதழ்கள் உலகம்

சிற்றிதழ் பதிவுகளுக்காக தனி முகநூல், பிளாக், " சிற்றிதழ்கள் உலகம் " என்ற பெயரில் துவங்கப்பட்டுள்ளது.

4. சிற்றிதழ்களை ஆவணப்படுத்தும் முயற்சியும் மேற் கொள்ளப்பட்டு வருகிறது.

5. சிற்றிதழாளர்களையும், சிற்றிதழ் எழுத்தாளர்களையும் கவுரப்படுத்தும் நிகழ்ச்சிகளை முன்னெடுப்பதற்கான முயற்சிகள் செய்யப்பட்டு வருகின்றன.

சிற்றிதழ் பதிவுகளை  முறைப்படுத்தி  அதை பாதுகாக்க வேண்டியதின் அவசியத்தை வலியுறுத்தினார். மேலும் நாம்  தொடர்ந்து  இணைந்து  செயல்படுவோம் என்றும் கூறினார்.



திரு.அன்பாதவன் அவர்கள் எனக்காக இந்தியாவிலிருந்து எடுத்து வந்திருந்த சிற்றிதழ்களை எனக்கு கொடுத்து என்னை மட்டற்ற மகிழ்சசிக்கு ஆளாக்கினார்.  
இந்த சந்திப்பில் பேசப்பட்ட தனி வாழ்க்கையின் விவாதங்களை தவிர்த்திருக்கின்றேன்.

நன்றி. வணக்கம்.

கிருஷ்.ராமதாஸ், சிற்றிதழ் நலம் விரும்பி, 08.10.2016.

  

No comments:

Post a Comment