Translate

Sunday, December 4, 2016

டிரங்குப் பெட்டியிலிருந்து இலக்கிய வெளிக்கு வரும் சிற்றிதழ்கள்

டிரங்குப் பெட்டியிலிருந்து இலக்கிய வெளிக்கு வரும் சிற்றிதழ்கள்

சிற்றிதழ் எண் : 3.

கலைச் சோலை இலக்கிய இதழ்
காலாண்டிதழ்.
ஆசிரியர் : திருமலை சோமு
சென்னை.

சிற்றிதழ் உலகில் பல அதிசயங்களும், ஆச்சரியங்களும் அவ்வப்போது நிகழ்வதுண்டு. அப்படி ஒரு நிகழ்வாக நடந்தது தான் கலைச் சோலை இலக்கிய இதழின் வெளியீடு என்றால் மிகையாகாது. ஆம் நண்பர்களே.






வானொலி நேயர் வட்டம் ஒன்று சிற்றிதழ் ஒன்றை துவங்கி நடத்தியுள்ளது,  நாம் எண்ணிப் பார்க்க முடியாத நிகழ்வாகவே நான் கருதுகின்றேன். வானொலி நேயர்கள், பத்திரிகை வாசர்களின் எழுத்தார்வத்தை ஊக்குவிக்கும் பொருட்டு நேவா இலக்கிய வட்டத்தின் சார்பாக துவங்கப்பட்ட இதழ் தான் கலைச் சோலை இலக்கிய இதழ்.

பிறகு இந்த இதழ் அனைத்து கல்லூரி மாணவர்களின் எழுத்தார்வத்தை போற்றும் வகையிலும், ஊக்குவிக்கும் வகையிலும் தமிழகம் முழுவதும் வலம் வர துவங்கி வெற்றி நடை போட்டுள்ளது. அனைத்து மாவட்டத்தில் உள்ள எழுத்தாளர்களும் தங்கள் பங்களிப்பை செலுத்தி சிறப்பு செய்துள்ளனர்.

முன்னணி படைப்பாளர்களான தி.க.சிவசங்கரன், சு.சமுத்திரம், சிவசங்கரி போன்றவர்கள் தங்கள் படைப்புகளையும், விமர்சனங்களையும் அளித்துள்ளனர் என்பதிலேயே இந்த இதழின் செயல்பாட்டை நாம் அறிய முடியும்.


எட்டயபுரத்தில் மகா கவி பாரதியின் பெயரில் இயங்கி வந்த தமிழ்நாடு கலை இலக்கிய மன்றத்துடன் இணைந்து இலக்கிய சந்திப்புகளை நடத்திய பெருமையும் உண்டு. இந்த சந்திப்புகளில் இளசை அருணா, இளம்பிறை மணிமாறன் போன்ற எழுத்தாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளனர்.

இத்தகைய சிறப்புமிக்க சிற்றிதழை வெளிக் கொண்டு வந்ததில் திரு.திருமலை சோமு [ஆசிரியர்],   திரு.தனுஷ்க் கோடி [நிர்வாக ஆசிரியர்], வானரமுட்டி ந.பாலு, கவிஞர் பாலாஜி [துணை ஆசிரியர்கள்] என்ற நண்பர்களின் செயல் திறனின் வெளிப்பாடு தான் இந்த இதழின் வெற்றிக்கு முக்கிய காரணமாகும்.


வழக்கம் போல சிற்றிதழ்களின் சாபக்க கேடு போல 9வது இதழுடன், தவிர்க்க முடியாத காரணங்களால் இதழ் நிறுத்தப்பட்டதை நம்மிடம் தெரிவித்த பொது திருமலை சோமு அவர்களின் வருத்தத்தையும், ஆதங்கத்தையும் நம்மால் உணர முடிந்தது.

இந்த நேரத்தில் இந்த இதழின் ஆசிரியர் திரு.திருமலை சோமு அவர்களைப் பற்றி குறிப்பிட வேண்டியது அவசியமாகும். பன் திறமை வித்தகர் என்றால் மிகையாகாது. தினமணி குழுமத்தில் பணியாற்றும் இவர் கவிஞர், எழுத்தாளர், பாடலாசிரியர், இசை அமைப்பாளர், வானொலி உலகில், உலக அளவில் பிரபலமானவர் என்றால்  மிகையாகாது.


சோலை எப்.எம். என்ற இணைய வானொலி ஒன்றை துவங்கும் முயற்சியில் வெற்றிகரமான சோதனை ஒலி பரப்பில் ஈடுபட்டுள்ளார். அவருடை அனைத்து முயற்சிகளுக்கும் சிற்றிதழ்கள் உலகம் வாழ்த்துக்களைத் தெரிவிப்பதுடன்,  உடன் துணையாக செயல்படும் என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம்.



சிற்றிதழ்கள் உலகத்தின் வேண்டுகோளை ஏற்று திருமலை சோமு அவர்கள் விரைவில் கலைச்  சோலை இலக்கிய இதழை மின்னிதழாக கொண்டு வரும் முன்னெடுப்பில் உள்ளார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.

கலைச் சோலைக் குழுவுக்கு சிற்றிதழ்கள் உலகம் வாழ்த்துக்களைத் தெரிவித்து, உங்களிடம் உள்ள பழைய இதழ்களை பி.டி.எப். பிரதியாக மாற்றி வெளியிட வேண்டும் என்ற வேண்டுகோளை முன் வைக்கிறது.

வாழ்த்துக்கள் நண்பர்களே.

கிருஷ்.ராமதாஸ்,
சிற்றிதழ்கள் உலகம்.
04.12.2016.






No comments:

Post a Comment