Translate

Friday, December 30, 2016

டிரங்குப் பெட்டியிலிருந்து - தலைச் சோறு

டிரங்குப் பெட்டியிலிருந்து - தலைச் சோறு
தலைச் சோறு சிற்றிதழ்
இணை ஆசிரியர்: சிவ.விஜயபாரதி
சோழபுரம், கும்பகோணம்.

வணக்கம் நண்பர்களே.
கடாரம் கொண்ட ராஜேந்திர சோழனின் வரலாற்றில் முக்கிய இடமாகத் திகழும், கும்பகோனம் அருகில் உள்ள சோழபுரம் மண்ணிலிருந்து, மண்வாசனை குறையாமல், தமிழகம் முழுவதுமான இலக்கிய வெளியில், வாசகர்களுக்கு இலக்கியச் சோறு வழங்க  வந்த சிற்றிதழ் தான் " தலைச் சோறு " என்ற பெருமைக்குரியது இந்த சிற்றிதழ்.  


மனிதனின் முக்கிய உறுப்புகளாக இருப்பவை இதயம், மூளை, நுரையீரல்.....என உள்ளன. இதில் மனிதன் செயல்பாட்டிற்கான முக்கிய கேந்திரமாக செயல்படுவது மூளை. இதை உணர்த்தும் வகையில் தான் இந்த இளைஞர் குழு இந்த இதழுக்கு தலைச் சோறு என்று பெயரிடப்பட்டதாக தன் நினைவுகளை இதன் இணை ஆசிரியராக பணியாற்றிய திரு.விஜயபாரதி நம்முடன் பகிர்ந்து கொண்டார். மேலும் சோறு என்ற வார்த்தை நம் கிராமங்களில் வழக்கத்தில்  உள்ள வார்த்தை மட்டுமல்ல, இது மன ரீதியாகவும், இலக்கிய ரீதியாகவும் ஒரு பிணைப்பை ஏற்படுத்தும் வார்த்தையாக உள்ளது என்பதால் மிகப் பொருத்தமாக இருந்துள்ளது.

2012ம் ஆண்டு திரு.மழையன் அவர்களை ஆசிரியராகவும், விஜயபாரதி அவர்களை இணை ஆசிரியராகவும், தக்கலை பென்னி, செல்வராஜ், மனோரஞ்சன் தாஸ், பைசல், குறிஞ்சி ஜெனித், அ.ஜெயேந்திரன் ஆகியோர்களை கொண்ட ஆசிரியர் குழுவுடன் துவங்கப்பட்டுள்ளது. மிகுந்த ஆர்வத்துடனும், அர்ப்பணிப்புடன் துவங்கப்பட்ட இந்த மாத இதழ், சமூக, அரசியல், இலக்கியம் சார்ந்த விழிப்புணர்வு இதழாக வெளி வந்துள்ளது. 

இந்த இதழில் அரசியல் கட்டுரைகள், கவிதைகள், சிறுகதைகள், திரை விமர்சனங்கள், இலக்கிய கட்டுரைகள் சிறப்பாக வெளிவந்ததை தன் பசுமை நினவாக விஜயபாரதி அவர்கள் நம்மிடம் பகிர்ந்த போது அந்த இதழ் மௌனித்துப் போனதின் வருத்தத்தையும்  நாம் உணர முடிந்தது. 
தலைச் சோறில் சேர்க்கப்பட்ட பதார்த்தங்களை இங்கே வரிசைப்படுத்துகின்றேன்.

1. கவிதை வழங்கியவர்கள் : இரா.அரிகர சுதன், சு.செல்வகுமாரன், குடந்தை குலோத்துங்கன், ஹசன் முகம்மது, இனியவன், ப.லெனிமன்.

2. திரை விமர்சனம் : செல்வராஜ், பைசல்.

3. கட்டுரை : பேரா.மோகனா, ம.சசிகுமார்.

4. ஓவியம் : கவிமணி.

இந்த இதழில் வெளி வந்த சில சிறப்புக்  கட்டுரைகள் :

1. சொந்த தேசமும் காறி உமிழ்தலும் - செல்வராஜ்.
2. பழங்கால கணிதவியலாளர்கள் - பேரா.மோகனா.
3. விதின்னா என்னப்பா - ம.சசிகுமார்.
4. உடைக்கும்  நவீன ஓவியத்தில் உடைபடும் மரபு - கவிமணி.
5. குழந்தைகளின்  வலி - குறிஞ்சி ஜெனித்.

இந்த இதழில் உலக அளவில் நடைபெற்ற மனித உரிமை மீறல் குறித்த தலையங்கங்களும், கட்டுரைகளும் இடம் பெற்றுள்ளன. குறிப்பாக யாழில் நடந்த  இறுதிப் போரின் போது நடை பெற்ற படுகொலைகள் பற்றி சண்டே டைம்ஸ் செய்தியாளர் மேரி கெல்வின் குறித்த தலையங்கத்தைக் கண்டபோது இதழாளர்களின் உலகளாவிய சிந்தனையையும் அறிய முடிந்தது. பாராட்டுக் கூறியது.

இரண்டு  இதழ்களே வந்து மௌனித்துப் போன தலைச் சோறு சிற்றிதழ், இலக்கிய உலகில் சலனங்களையும், தாக்கங்களையும் ஏற்படுத்திய இதழ் என்றால் மிகையாகாது. சிற்றிதழ்களின் வெளியீட்டிற்கு அர்ப்பணிப்பும், ஆர்வமும், தமிழ் மீதான காதலும் இருந்த போதும், பொருளாதார நெருக்கடி என்ற சிக்கலில் மாட்டி நிறைய சிற்றிதழ்கள் சிதைந்து போவது வருத்தத்திற்குரியது. 

இணை ஆசிரியர் விஜயபாரதியுடனான கருத்து பகிர்வில், இந்த இதழ் எங்கள் கனவு. பல இளைஞர்களுக்கான எழுத்துக் கனவை நனவாக்கும் முக்கிய நோக்கத்தை கையிலெடுத்து தன் செயல்பாட்டைக் துவங்கியது. உலக எழுத்தாளர்களின் படைப்புகளை தமிழ் இலக்கிய வெளிக்கு கொண்டுவருவது, மனித உரிமை செயல்பாட்டை முன்னிறுத்துவது, ஒடுக்கப்பட்ட மக்களின் அவலங்களை வெளிக் கொண்டு வந்து, உரிய தீர்வை நோக்கி நகர்த்தும் கருவியாக கட்டுரைகளை வெளியிடுவது, சிறந்த திரைப்படங்களை விமர்சிப்பதன் மூலம் மக்களுக்கு அடையாளங்காட்டுவது. இளைஞர்களின் இதயத்தில் சமூக, அரசியல், இலக்கிய விழிப்புணர்வுகளை விதைக்கும் செயல் திட்டங்களை செயல்படுத்தும் கேந்திரமாக தலைச் சோறு செயல்பட்ட நினைவுகளை நம்முடன் விஜயபாரதி அவகளின் பதிவில் காண முடிந்தது. அந்த இதழ் நின்று போன சோகம் இழைந்தோடிய போதும், மீண்டும் வெளிக் கொண்டு வந்து வெற்றிச்  சரித்திரமாக்க வேண்டும் என்ற தீராத வேட்கை இருப்பதை நான் உணர்ந்தேன். 

நான் அவரிடத்தில் உங்கள் நண்பர்களுடன் கலந்தாலோசியுங்கள். செலவைக் குறைத்து, இணைய உதவியுடன் இதழை வெற்றிகரமாக  நடத்தும் ஆலோசனைகளை தெரிவித்தேன். அதற்கு சிற்றிதழ்கள் உலகம் தக்கத் துணையாக உடன் வரும் என்ற உறுதியளித்தேன். 

இந்த இதழின்  ஆசிரியர் குழு உறுப்பினர்கள், பங்கெடுத்த எழுத்தாளர்கள், வாசகர்கள் அனைவருக்கும் சிற்றிதழ்கள் உலகம் வாழ்த்துகளையும், பாராட்டுக்களையும் உரித்தாக்குகின்றது. 

இதழ் நின்ற மனச் சுமையை மீறி அத்தனை தகவல்களையும்  நம்முடன் பகிர்ந்து கொண்ட நண்பர் திரு.விஜயபாரதி அவர்களுக்கு சிற்றிதழ்கள் உலகம் பாராட்டுதலையும், நன்றியினையும் தெரிவித்துக் கொள்கிறது.
வாழ்த்துக்கள் விஜயபாரதி.

கிருஷ்.ராமதாஸ்,
சிற்றிதழ்கள் உலகம்.
31.12.2016.



No comments:

Post a Comment