Translate

Tuesday, January 31, 2017

சிற்றிதழும் சுகனும் - ஒரு நினைவலை

 சிற்றிதழும்  சுகனும் - ஒரு நினைவலை

கிருஷ்.ராமதாஸ்,
ஆசிரியர் & வெளியீட்டாளர்,
சிற்றிதழ்கள் உலகம் மின்னிதழ்.

ஆம் நண்பர்களே. காணாமலே காதல் கொண்ட  காதல் கோட்டை நாயகன் போல, நானும் காணாமலே காதல் கொண்ட நண்பன் தான் சௌந்தர சுகன் சிற்றிதழின் ஆசிரியர் & வெளியீட்டாளர் மறைந்த அன்பு நண்பர் திரு.சுகன் என்கிற சரவணன்.

பல ஆண்டுகளாக சௌந்தர சுகன் என்று ஒரு சிற்றிதழ் வருவதை அறிந்திருக்கின்றனே ஒழிய சுகனை அறிந்திருக்கவில்லை. சிற்றிதழ்கள் குறித்த செயல்பாடுகளில் தீவிரமாக ஈடுபட்ட பிறகு தான் அவரைப் பற்றிய விபரங்களை தேட ஆரம்பித்தேன்.






அப்போது தான் சிற்றிதழ் துறையில் அவரின் செயல்பாடுகள் என்னை வியக்க வைத்தது. ஒரு தனி மனிதன் எத்தனை இலக்கிய ஆர்வமும், தமிழ் மீது தீராக் காதலும், அர்ப்பணிப்பும், உழைப்பும், சமரசம் செய்யாத இலக்கிய வெளிப்பாடும், எத்தனை அபூர்வமான சாதனைகளின் உச்சத்திற்கு அவனை அழைத்துச் செல்கிறது என்பதற்கு சுகன் ஒரு உதாரண புருஷனாக திகழ்கின்றார் என்றால் மிகையாகாது. 334 இதழ்கள் - நினக்க முடியாத இமாலய சாதனை இது. 




கடந்த மாதம் சிற்றிதழ்கள் உலகம் என்ற மின்னிதழை வெளியிட்டேன். அந்த ஒரு இதழை, அதுவும் அச்சு பிரதி இல்லாமல், இணையத்தில் வெளியிட, எத்தனை இடையூறுகள், தாமதங்கள், கதை, கவிதை தெரிவு செய்வதில் குழ்ப்பங்கள் என அத்தனையையும் கடந்து வர உண்மையிலேயே சிரமப்பட்டேன். அத்தனைக்கு பிறகும் கவிதை தெரிவில் எதிர்மறை கருத்துக்களை எதிர் கொள்கின்றேன்.

ஆனால் 334 இதழ்களை சுகன் எத்தனை லாவகமாக கையாண்டுள்ளார். பிரமிப்பாக இருக்கிறது. அத்தனையும் இலக்கிய பொக்கிஷங்கள் என்பதை கடைசி 2 இதழ்களை படித்ததிலேயே நான் உணருகின்றேன்.


எழுத்தாளரும், அணி என்ற சிற்றிதழை நடத்தியவரும், என் பாசத்திற்குரிய நண்பர் திரு.அன்பாதவன் அவர்கள் எனக்காக இந்தியாவிலிருந்து துபாய் கொண்டுவந்த சிற்றிதழ்களில் சௌந்தர சுகன் 333 & 334 இரண்டும் இருந்தன. அந்த இதழ்களை கடந்த வாரம் படிக்க முனைந்த போது தான், சுகன் அவர்களின் சிற்றிதழ் மீதான ஈடுபாட்டை அறிய முடிந்தது.



இதழில் இடம் பெறும் உள்ளடக்கங்களை தெரிவு செய்வதில் எத்தனை அக்கறையும், ஈடுபாடும் காட்டி இருக்கின்றார் என்பதை நான்  உணர்ந்தேன். 333வது இதழில் தஞ்சை ஹரினி அவர்கள் "கற்பினும் மேலாம் நட்பு" என்ற சிறுகதை ஒன்றே போதும். அந்த கதையை படித்து முடிக்கும் போது நான் கண்ணீர் விட்டு அழுதுவிட்டேன். அத்தனை தூரம் நட்பை அடையாளப்படுத்தும் மிகச் சிறந்த சிறுகதைகளில் இதுவும் ஒன்றாக திகழும். இது போன்ற தெரிவுகள் தான் சுகன் இதழின் வெற்றிச் சூத்திரம் என்று நான் புரிந்து கொண்டேன்.

புதிய மாதவி, வெற்றி பேரொளி, அமீர் ஜான், கார்த்திகேயன் போன்றோரின் கவிதைகளும், திருமதி.சக்தி அருளாணந்தம், அறிவுறுவோன், சாலமன் ஆகியோரின் கட்டுரைகளும் இதழுக்கு சிறப்பு சேர்த்திருக்கின்றன.

இந்த இதழை நான் பிடிஎப் பிரதியாக மாற்றி இருக்கின்றேன். சுகன் அவர்கள் மறைவிற்கு பிறகு இதழ் நின்று போனது தான் வருத்தமான நிகழ்வு.

சுகன் மறைந்தாலும் அவர் சிற்றிதழ் உலகில் ஆற்றியுள்ள சாதனை என்றும் நிலைத்து நிற்கும். மற்ற சிற்றிதழாளர்களுக்கு ஒரு வழி காட்டாலாகவும், முன்னுதாரணமாகவும் திகழும் என்பது திண்ணம்.



இத்தனை புகழுக்குரிய சுகனை நன் நேரில் சந்தித்ததில்லை. என் சிற்றிதழ்  ஊக்குவிப்புத் திட்டத்தின் கீழ் சுகன் இதழுக்கு சந்தா செலுத்தும் பொருட்டு 2 முறை செல்பேசியில் பேசியிருக்கின்றேன். ஆம் எங்கள் நட்பு நேரில் சந்திக்காமலே முடிந்துவிட்டது தான் துயரமானது. 







நேரில் சந்திக்காவிட்டாலும் சுகன் உங்கள் நினைவு என் நெஞ்சைவிட்டு அகலாது  நண்பா. நினைவிருக்கும் வரை நீயும் என் நினைவில் இருப்பாய். நீ, நான் காணாமலேயே நட்பு கொண்ட காதல் கோட்டை நாயகன் என்பதில் துளியளவும் மாற்றில்லை நண்பா.

கிருஷ்.ராமதாஸ்,
01.02.2017.

No comments:

Post a Comment