Translate

Sunday, April 23, 2017

சிற்றிதழ்கள் உலகம் 3வது இதழ்

உலக புத்தக நாள்
சிற்றிதழ்கள் உலகம் 3வது இதழ் வெளியீடு
கிருஷ்.ராமதாஸ், 
ஆசிரியர் & வெளியீட்டாளர்.

வணக்கம் நண்பர்களே.
உலக புத்தக நாளில் உங்களின் முன் எங்கள் சிற்றிதழ்கள்  உலகம் 3வது இதழை உலக வாசக வெளியில் இன்று வெளியிடுவதை மிகப் பெருமையாக கருதுகின்றேன். இந்த வெற்றியை எங்களுக்கு சாத்தியமாக்கிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் எங்கள் சிரம் தாழ்ந்த நன்றியை உரித்தாக்குகின்றோம்.



இதழின் உருவாக்கத்திலும் , வெளியீட்டிலும், வாசகர்களுக்கு அனுப்புவதிலும், அச்சிடுவதிலும் என் நண்பர்களின் உதவி என்னை உணர்ச்சிக்குள்ளாக்குகிறது. இதில் நான் ஒரு ஒருங்கிணப்பாளர் போல தான் செயல்படுகின்றேன்.
முதன் முதலில் சிற்றிதழ்கள் உலகம் தலைப்பையும், ஒரு லோகோவையும் வடிவமைக்கும் முயற்சியில் இறங்கும் போது, இதோ  நாங்கள் இருக்க்கின்றோம் என்று  மதுரை எம்.பி.ராஜன் அவர்களும், வதிலை பிரபா  அவர்களும் உதவிக்கு வந்தார்கள். அவர்கள் இருவருக்கும் என்  இதயம் நிறைந்த  நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன். இதழின் முன் பக்க அட்டையில் தலைப்பில் வருவது அது தான்.



லோகோ வடிவமைப்பை நானே இணையத்தில் கிடைத்த படங்களை வைத்து உருவாக்கினேன். அதில் என் ஆதர்ச நாயகன் பாரதியின் உருவம் இடம் பெற வேண்டுமென்பதில் நான் உறுதியாக  இருந்தேன். ஒரு ஜ்வாலையாக எரியும் தீபத்தின் வடிவத்தில் பாரதி இடம் பெற்றுள்ளார். புத்தகத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் விதமாக ஒரு மாணவனும், ஒரு மாணவியும் புத்தகம் படிக்கும் படத்தை தெரிவு செய்தேன்.  நண்பர்களிடம் தலைப்பும், லோகோவும் பெரும் வரவேற்பை பெற்றுத்தந்தது.






ஒவ்வொரு இதழின் உள்ளடக்கங்களை சேகரிக்கும்  போதும்  நண்பர்களை விடாமல் தொடர்பு கொண்டு அவர்களிடம் வாங்குவதும், அவற்றை வேர்ட் பார்மேட்டில் மாற்றி பிழைகளை திருத்தி வடிவமைப்புக்கு அனுப்புவது வரை நம் வேலைதான். நாங்கள் எதிர்பார்த்ததை விட எழுத்தாளர்களின் ஆதரவு சிற்றிதழ்கள் உலகம் இதழுக்கு கிடைத்திருப்பது, நண்பர்களிடம் ஒரு அபரிதமான எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கிறது  என உணர்கின்றேன். ஒவ்வொரு இதழின் வடிவமைப்பின் போதும் குறிப்பிட்ட பக்கத்திற்குள் முடிப்பதில் கடும் நெருக்கடியை சந்திக்கின்றோம். இந்த இதழில் கூட ஒரு சிறுகதையை அடுத்த இதழுக்கு மாற்றி , அதன் எழுத்தாளரிடம், எங்கள் நிலையை  எடுத்துச் சொல்லி சம்மதிக்க செய்தோம். அவரும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டார். சில எழுத்துக்களை நண்பர்களின் இதழுக்கு மடை மாற்றிய சம்பவங்களும்  உண்டு.

இதழ் வடிவமைப்பில் தன்  ஓயாத பணிகளுக்கிடையில் நிறைவேற்றித் தந்த திரு.தமிழ்நெஞ்சம் அமின் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி.



இந்த நேரத்தில் சிற்றிதழ் ஆர்வலர்கள், வாசகர்கள், அச்சுப்பிரதிக்கான சந்தா  தொகை செலுத்தி ஆதரவளிக்க வேண்டுகின்றேன்.




3வது  இதழ் மறைந்த எழுத்தாளர் அசோகமித்திரனுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அவருடைய படத்துடன் வெளிவந்துள்ளது.  அதில் உள்ள படத்தை வெளியிட ஒப்புதல் தந்த நண்பர் திரு.ரேஷ்மி அகமது அவர்களுக்கு நன்றி. அசோகமித்திரன் நினைவுகள் குறித்து 3 வாசகர்கள் கட்டுரை எழுதி உள்ளனர். 3 சிறுகதைகளும் , 8 கவிதைகளும், சிற்றிதழ் விமர்சனம் , அறிமுகம், அனுபவம் குறித்த கட்டுரைகளும் இடம் பிடித்துள்ளன. 

                                                              திரு.ரேஷ்மி அகமது 

மேக்ஸ்டார் இணைய தளத்தில் பணம் கட்டி படிக்கும் வகையில் உலக வாசகர்களுக்கு வெளியிடப்பட்டுள்ளது. 
இந்த  நேரத்தில் புத்தகம் விற்க கடந்த காலத்தில் பயன் படுத்திய படம் ஒன்றை ஏர்வாடி ராதாகிருஷ்ணன் அய்யா வெளியிட்டிருந்தார். அதை இங்கே பதிவு செய்கின்றேன். ரூ.500 க்கு புத்தகம் வாங்கினால் நடிகர் தங்கவேலு அவர்களுடன் படம் எடுத்துக் கொள்ள முடியும்.




நன்றி நண்பர்களே.
உலக புத்தக நாள் வாழ்த்துக்கள்.

கிருஷ்.ராமதாஸ்,
23.04.2017.

No comments:

Post a Comment